நண்பர்களே,
கிமுவில் சோமு என்ற இந்த காமிக்ஸ் பிரபல படங்களான இம்சை அரசன் புலிகேசி,அறை எண் 305ல் கடவுள் ஆகிய படங்களை இயக்கிய சிம்பு அவர்களால் வரையப்பட்டு ஆனந்த விகடனில் 1999 ஆம் ஆண்டு 25 வாரங்களாக தொடராக வெளிவந்தது. சிறந்த சித்திரங்களுடன் நகைசுவையுடனும் வாசகர்களின் பாராட்டை பெற்றது.இது ஆனந்த விகடனில் வெளியான நேரத்தில் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை.தற்போது முழு புத்தகமாக படித்ததில் மகிழ்ச்சி.மேலும் இந்த சித்திரகதை உருவாக நமது கதாநாயகர்களான இரும்புக்கை மாயாவி,லக்கி லூக் ஒரு தூண்டுதலாக அமைந்ததாக சிம்பு அவர்கள் கூறியுள்ளார். இக்கதை 2004 ஆம் வருடமே நர்மதா பதிப்பகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தான் எனக்கு தெரிந்தது.சிம்பு அவர்கள் அவரது என்னுரையில் நமது லயன் காமிக்ஸ் கதாநாயகர்கள் ஆர்ச்சி,இரும்புக்கை மாயாவி ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.அவர் தற்போது எடுத்து கொண்டிருக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படம் கூட நமது லக்கி லூக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.சரி நாம் கதைக்கு வருவோம்.
கதைக்கு போகும் முன் கதையின் கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.கதையின் கதாநாயகன் சோமு விஞ்ஞானி அவனது நண்பன் வெங்கி. சோமுவின் மாமா மகள் சுட்டிப்பெண் ருக்கு மற்றும் கயவர்கள் கபாலி,பிச்சு.மேலும் முல்லா தாத்தா இவர்களுடன் குட்டி டினோசர் சுப்புணி.டினோசர் எப்படி வந்தது என்பதை கதையில் காண்க.
சிறுவன் சோமு தன் தாத்தாவின் மேல் பாசமாக இருக்கிறான்.அவனது தாத்தா அவருக்கு கிடைத்த ஒரு விசித்திர பலகையின் துணை கொண்டு 12 வருடங்களாக ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.ஒருநாள் ஆராய்ச்சியில் ஏதோ வெடித்து தாத்தா இறந்து போகிறார்.மனம் உடையும் சோமு அந்த விசித்திர பலகையை எடுத்து வைத்து கொள்கிறான்.மேல்படிப்புக்காக தன் மாமா ஊருக்கு சென்னை செல்கிறான்.காலங்கள் உருண்டோடுகின்றன.பதினெட்டு வருடங்களுக்கு பிறகு சோமு படித்து விஞ்ஞானி ஆகிறான்.
தன் தாத்தா ஆராய்ச்சியை தொடர்கிறான்,வெற்றி கொள்கிறான்.தன் தாத்தாவின் கனவான கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறான். தன் கண்டுபிடிப்பை தன் மெக்கானிக் நண்பன் வெங்கியிடம் காட்டுகிறான்.இருவரும் கால பயணம் மேற்கொள்ள தயாராகின்றனர்.அப்போது சோமுவின் மாமா பெண் ருக்கு வருகிறாள்.அவள் அடம் பிடிப்பதால் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்து கால இயந்திரத்தில் ஏறி கி.பி 1450 செல்கின்றனர். அங்கே அந்த காலத்தில் வேட்டைக்கு வந்த மன்னர் படை துரத்தவே மீண்டும் நிகழ்காலம் வருகின்றனர்.
இதையெல்லாம் பார்க்கும் கயவர்கள் கபாலியும்,பிச்சுவும் அந்த கால இயந்திரத்தை தாங்கள் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவு பண்ணுகின்றனர்.சோமு,வெங்கியை மிரட்டி ருக்குவை பணயக்கைதியாக எடுத்துகொண்டு கால இயந்திரம் மூலம் கிமு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு பின்னால் செல்கின்றனர். என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் சோமுவும் வெங்கியும் முல்லா தாத்தாவின் உதவியை நாடுகின்றனர்.அவர் வைத்திருக்கும் பறக்கும் கம்பளம் மூலம் சோமு இன்னொரு கால இயந்திரம் உருவாக்கி அவர்களும் கிமு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு பின்னால் பயனமாகின்றனர். அவர்கள் கபாலி,பிச்சுவை பார்த்தார்களா,ருக்குவை காப்பாற்றினார்களா என்பது மிகவும் சுவைபட விறுவிறுப்பாக செல்கிறது.
கதையில் அவர்கள் பயணிக்கும் டினோசர் காலம், ஆதிவாசிகள்,செவ்விந்தியர்கள்,சக்கரத்தை கண்டுபுடிக்கும் மனிதன்,டைட்டானிக் கப்பல்,கொலம்பஸ்,ரோமானிய பேரரசு,அசோக சக்கரவர்த்தி,கிளியோபட்ரா ஆகியவை மனதை கவரும் வண்ணம் உள்ளன.வாங்கி படித்து பாருங்களேன்.இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்கவும். விலை ரூபாய் 40/-.
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse All - உலவல்