My Neighbor Totoro [1988]


 Studio Ghibli அனிமேஷன் நிறுவனத்தை பற்றி அனிமேஷன் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஜப்பானை சேர்ந்த அனிமேஷன் நிறுவனம். டிஸ்னிக்கு இணையாக 2D அனிமேஷனில் கலக்குவார்கள். உலகெங்கும் தற்போது ரசிகர்கள் இதற்கு உண்டு.  ஜப்பான் அனிமேஷன் படங்கள் சிலருக்கு பிடிக்காது. அவர்கள் Studio Ghibli வின் படங்களை பார்த்தால் தங்கள் கருத்துகளை மாற்றி கொள்வார்கள். இவர்களுடைய சிறப்பு என்னவென்றால் இயற்கை அழகை அருமையாக அனிமேஷனில் கொண்டு வருவது தான். இந்த விஷயத்தில் டிஸ்னியே இவர்களிடம் தோற்று விடும்.

இந்த நிறுவனம் இருவரால் நிறுவப்பட்டது. அதில் ஒருவர் சிறந்த அனிமேஷன் பட இயக்குனர் என பெயர் வாங்கிய Hayao Miyazaki. இவரும் Studio Ghibliயும் சேர்ந்து எடுத்த எந்த அனிமேஷன் படமும் சோடை போனதில்லை. Hayao Miyazaki இவரால் உருவாக்கப்படும் அனிமேஷன் கதாபாத்திரங்களை நம்மால் எளிதில் மறக்க இயலாது. இவர்களது படங்களின் கதாநாயகர்கள் பெரும்பாலும் குழந்தைகள் தான். அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகள். குழந்தைகளே கதாநாயகர்கள் என்பதால் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த படங்கள் என நினைத்து விடாதீர்கள். குழந்தைகளை விட நமக்கே அதிக தாக்கத்தை இவர்களது படங்கள் ஏற்படுத்தும்.

Hayao Miyazaki ஆல் உருவாக்கப்பட்ட ஒரு அனிமேஷன் பாத்திரம் totoro. பூனை போன்றும் முயல் போன்றும் தோற்றமளிக்க கூடிய காடுகளில் வசிக்கும் ஒரு நல்ல சக்தி. தேவதை போல என கூட சொல்லலாம். இந்த கதாபாத்திரம் Hayao Miyazaki பல படங்களில் வரும். இக்கதையில் இது ஒரு முக்கிய பாத்திரம். இதற்கும் இரு குழந்தைகளுக்கும் ஏற்படும் நட்பே இந்த படம்.

Satsuki and Mei என்ற இரு பெண் குழந்தைகள் தங்கள் அப்பாவோடு மூட்டை முடிச்சுகளோடு புது வீட்டுக்கு வருவதில் இருந்த படம் ஆரம்பிக்கிறது. இரு குழந்தைகளின் அம்மா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் மருத்துவமனைக்கு பக்கத்தில் இருக்கும் ஊருக்கு இவர்கள் இடம் பெயர்கிறார்கள். இதில் மூத்த பெண் அம்மா வீட்டில் இல்லாத்தால் வீட்டு வேலைகளோடு தனது தங்கையையும் பார்த்து கொள்கிறாள் , அதோடு பள்ளிக்கும் செல்கிறாள். அப்பா வாத்தியாராக வேலை செய்கிறார். இருவரும் அம்மா விரைவில் குணமாகி வரவேண்டும் என எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். புது வீட்டுக்கு வரும் இருவரும் புது வீட்டை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றனர்.

இவர்கள் வீட்டுக்கு அருகே வசிக்கும் சிறிய மற்றும் பெரிய totoroகளோடு நண்பர்கள் ஆகின்றனர். இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு தான் படத்தின் கதை. கதை இவ்வளவு தான் என்றாலும் மேலே  படத்தில் இருக்கும் ஆரம்ப காட்சியான வண்டியில் மூட்டை முடிச்சுகளோடு வரும் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை நம் கண்ணை வெளியே எடுக்க முடியாது.

இரு பெண்குழந்தைகளின் குறும்புகள் முக்கியமாக குட்டி பெண்ணான Meiயின் குறும்புகளை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. சந்தோசம் ,பயம், அழுகை , சிரிப்பு , சிறு குழந்தைகள் அவ்வப்போது பேசும் மேதாவிதனமான பேச்சு என அனைத்து உணர்வுகளையும்  அனிமேஷனில் அட்டகாசமாக கொடுத்திருக்கிறார்கள். மேலும் சிறிய மற்றும் பெரிய totoro மற்றும் பூனை பஸ் என அனைத்து கதாபாத்திரங்களுமே நம்மை ரசிக்க வைக்கும்.

அனிமேஷன் முக்கியமாக மழை பெய்யும் காட்சிகள் நம்மை லயிக்க வைக்கும். Satsuki தனது தங்கையை தூக்கி கொண்டு, குடையையும் பிடித்து கொண்டு மழையில் இரவில் தந்தைக்காக காத்திருத்தல், கூடவே நிற்கும் totoro  , அதன் பின் வரும் பூனை பஸ் என வரும் காட்சியை ரசிக்காமல் இருக்க முடியாது.

இப்படம் 1988இல் ஜப்பானில் வெளிவந்தது. முதலில் ஜப்பான் மொழியில் வந்தாலும் டிஸ்னியால் 2006 ஆம் வருடம் ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. டோரன்ட்டில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அனிமேஷன் பட ரசிகர்கள் தவற விட கூடாத படம் என நிச்சயம் கூற முடியும். உங்களின் சிறுவயது நினைவுகளை இப்படம் தட்டி எழுப்ப தவறாது. படத்தின் ட்ரைலர் கீழே


Share:

8 comments:

  1. கொடுக்கப்பட்ட தகவல்கள் எல்லாமே புதியது சகோ, நான் அனிமேஷன் படங்களை பார்ப்பது குறைவு.நல்ல திரை அலசல்..மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்

      Delete
  2. ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் லக்கி.. விமர்சனம் அழகு!
    The Secret World of Arriety படம், "2010ற்கான சிறந்த படங்கள்" லிஸ்டில் அடிக்கடி இடம்பெறக்கண்டதால் அதைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அதுவும் Studio Ghibli தான்னு இப்ப போய் தெரிஞ்சுகிட்டு வர்றேன்..
    அது பார்க்கும் போது இந்தப் படத்தையும் சேர்த்து பார்த்துடுறேன்.. நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,
      The Secret World of Arriety இதுவும் Studio Ghibli படம் தான். நான் போன வருடமே பார்த்துவிட்டேன். அங்கே 2010இல் ரிலீஸ் ஆன படத்தை டப் செய்து இப்போது தான் வெளியிடுகிறார்கள். ஆனால் இயக்குனர் Hayao Miyazaki இல்லை.

      Delete
  3. புத்தாண்டில் ஒரு நாளு நாள் டைம் கிடைக்கும். அப்போது கட்டாயம் பார்த்துவிடுகிறேன். விமர்சனம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. படத்தை தவற விடாதீர்கள் ஹாலிவுட்ரசிகரே

      Delete
  4. சூப்பர் அலசல்

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல விமர்சனம் லக்கி...கார்டூன் உலக சினிமா போல் உள்ளது !! படத்தை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி !! படத்தை கண்டிப்பாய் பார்க்கிறேன் !!

    ReplyDelete